பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புக்கு முக்கியத்துவம் அளிக்க திருத்திய பாடவேளை அட்டவணையை பள்ளிகல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் வெளியிட்டார்.
பாடப்புத்தகங்கள், தேர்வுகள் என வகுப்பறைக்குள் முடங்கிக் கிடக்கும் மாணவர்கள் விளையாடவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் போதிய நேரம் கிடைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில், 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்தில் 3 நாள் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மேல்நிலை வகுப்புகளான 11, 12-ம் வகுப்புகளுக்கு வாரத்தில் 2 நாள் உடற்கல்வி வகுப்புகள் நடத்த வேண்டும்.
உடற்கல்வி வகுப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பிற பாடங்களை நடத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாரத்தின் மற்ற 2 நாட்களில் கூடுதல் செயல்பாட்டு வகுப்புகளை நடத்தலாம். அல்லது அவற்றை உடற்கல்வி வகுப்புகளாக மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் மாணவர்களின் உடல்நலம் மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்த வாய்ப்பு ஏற்படும்.
திருத்திய கால அட்டவணையின்படி, வாரத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கு தலா 4 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கணிதம், அறிவியல் பாடங்களுக்கு கூடுதலாக ஒரு பாடவேளை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை செயல்படும். மேலும், நுண்ணறிவு மற்றும் இணையவழிக் கல்விக் கருவிகளைப் பயன்படுத்தும் டிஎன் ஸ்பார்க் (TN SPARK) திட்டத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு பாடவேளை 90 நிமிடங்களாகவும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை 45 நிமிடங்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.